தமிழர்பகுதியில் மாமாவும் மருமகனும் சேர்ந்து செய்த மோசடி அம்பலம் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
அம்பாறை பெரிய நீலாவணை மற்றும் சம்மாந்துறை பொலிஸாரின் தொடர் அதிரடி நடவடிக்கையின் மூலம், ரூபா 2 கோடி 30 இலட்சம் பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் மாமா மற்றும் மருமகன் என அடையாளம் காணப்பட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கொழும்பிலிருந்து கல்முனை வழியாக சம்மாந்துறைக்குச் சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில், கடந்த வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் 49 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர். பெரேரா அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில், சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைகள், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இரு வேறு சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, குஷ், கேரளா கஞ்சா, ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள், கைப்பேசிகள் மற்றும் பணத் தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சோதனை செய்யப்பட்ட இரு வீடுகளிலும் அதிகளவான CCTV கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 68 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் மாமா–மருமகன் உறவுமுறையுடையவர்கள் எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்கள் சம்மாந்துறை பகுதியில் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரம் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த முக்கியமான கைப்பற்றலைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர அவர்களின் பணிப்புரையின் பேரில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் உத்தரவின்படி,
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினரை பாராட்டியதுடன், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்கள் இன்று (30) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெரிய நீலாவணை பொலிஸாரின் கொழும்பு–கல்முனை பேரூந்து மீதான விசேட சோதனை நடவடிக்கையே, இந்த போதைப்பொருள் வலையமைப்பை முறியடிக்க காரணமாக அமைந்துள்ளதாகவும், இதன் மூலம் பெருமளவான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.