யாழ்ப்பாண பாடசாலை ஒன்றின் அதிபர் செய்த மோசமான செயல்! ஆளுநருக்கு பறந்த கடிதம்
யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக இருந்து முறைகேடாக நடந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைந்துள்ள கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தவறாக வழி நடத்தி கொட்டடி சமூகத்தை ஏமாற்றி மிக மோசமான ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளமை சமூகத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
பாடசாலை சமூகத்தை ஏமாற்றி ஊழல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த அதிபர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளாகிய நாம் கௌரவ ஆளுநருக்கு கடந்த 27-12-2022 ஆம் திகதி அன்று எழுத்து மூலம் அறிக்கையாக வெளியிடப்பட்டிருந்தது.
அதன் பிரதிகள் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தன.
இருப்பினும், 2 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் எமது கோரிக்கை முறையான விதத்தில் விசாரிக்கப்பட்டு நியாயமான தீர்வு இன்று வரை வழங்கப்படவில்லை.
அதிபர் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகள்
இந்த பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு சமைத்த உணவையே பெற்று கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதிலும் இலைக்கஞ்சியே தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி முறைப்பாடு செய்த பெற்றோர்கள் அதிபரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் உணவு கணக்கை பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்று சென்ற பின்னரும் பிரதி அதிபரே தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்.
உணவு கணக்கு தொடர்பாக ஆசிரியர்கள் கேள்வியெழுப்பியமையால் குறித்த உணவு கணக்கு அறிக்கை அதிபரால் காணாமலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல மோசடிகளில் அதிபர் ஈடுபட்டதால் ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் அனுப்பட்டுள்ளது.