பொலிஸ் அதிகாரிகள் என்ற பெயரில் சூட்சம திருட்டு ; தப்பியோடிய சந்தேக நபர்கள்
கேகாலையில் ருவன்வெல்ல நகரத்தில் பொலிஸ் அதிகாரிகள் என கூறி, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை சோதனை செய்யும் போர்வையில் லொறியின் உதவியாளரிடமிருந்த பணத்தை திருடிச் சென்ற இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஒக்டோபர் 09 ஆம் திகதி அன்று பால்மா ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் சாரதி தனிப்பட்ட தேவைக்காக கேகாலையில் ருவன்வெல்ல நகரத்தில் லொறியை நிறுத்தி வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
லொறியில் சோதனை
இதன்போது இனந்தெரியாத இருவர், தங்களை பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு லொறியில் இருந்த உதவியாளரையும் லொறியையும் சோதனை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
பின்னர் லொறியின் உதவியாளர் பையை சோதனையிட்டு பார்த்த போது பையிலிருந்த 93 ஆயிரத்து 715 ரூபா பணம் காணாமல்போயுள்ளதை அவதானித்து லொறியின் உரிமையாளரிடம் நடந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து லொறியின் உரிமையாளர் இது தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.