தீபாவளிக்காக குவிந்த மக்கள்; பொலிசாரிடம் சிக்கிய நான்கு திருடிகள்
ஹட்டனில் பணப்பைகள் மற்றும் தங்க நகைகளை திருடிய நான்கு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் நகருக்கு வரும் வாடிக்கையாளர்களின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடும் யுவதிகளே (29) ஹட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு அதிகளவான வாடிக்கையாளர்கள் வருகை தந்திருந்த நிலையில், சில வாடிக்கையாளர்களின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் காணாமல் போனதாக ஹட்டன் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இந்நிலையில் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பேரில் வாடிக்கையாளரின் கழுத்தில் இருந்த நகையை திருட முற்பட்ட பெண்ணை கைதுசெய்துள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.
நான்கு யுவதிகளையும் கைது செய்தபோது அவர்கள் வசம் இரண்டு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய் பணமும் சில தங்க ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21-26 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் வென்னப்புவ மற்றும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதோடு சந்தேகநபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (30) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.