பிரியாணி சாப்பிட்ட பின் தார்பூசணியால் பலியான நால்வர் ; நீடிக்கும் மர்மங்கள்
மும்பையின் பைதோனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கின் மர்மம் இன்னும் விலகவில்லை என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி, அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி நஸ்ரீன் மற்றும் அவர்களின் இரண்டு மகள்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள் இறப்பதற்கு முன்னதாக தர்பூசணி பழத்தை உட்கொண்டதால், ஊடகங்கள் இதனை "தர்பூசணி மரணங்கள்" எனப் பெயரிட்டன.
இதனால் மும்பை சந்தைகளில் தர்பூசணி பழத்தின் கேள்வி வீழ்ச்சியடைந்து, அதன் விலையும் சரிந்தது.

ஆரம்பத்தில் தர்பூசணி பழம் கெட்டுப்போயிருந்ததாகக் கருதப்பட்டாலும், சமீபத்திய தடயவியல் பரிசோதனையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் (கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல்) மற்றும் அவர்கள் சாப்பிட்ட தர்பூசணி பழத்தின் எஞ்சிய பகுதிகளில் துத்தநாக பொஸ்பைட் எனும் நச்சுப் பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
இது பொதுவாக எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு வீரியமிக்க இரசாயனமாகும். இந்த நச்சு உடலுக்குள் சென்றவுடன் 'பொஸ்பைன்' வாயுவை உருவாக்கி, உடல் செல்கள் ஒட்சிசனைப் பயன்படுத்துவதைத் தடுத்து, உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும்.
நச்சு கண்டறியப்பட்ட போதிலும், அது எவ்வாறு தர்பூசணி பழத்திற்குள் சென்றது என்பது குறித்து இன்னும் தெளிவு பிறக்கவில்லை.
இது தற்கொலையா, விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுவரை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் உட்பட 40 முதல் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவர்கள் வசித்த கட்டிடத்தில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததாகவும், அதனால் பலர் எலி மருந்துகளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மரணத்திற்கு முன்னதாக, டோகாடியா குடும்பத்தினர் உறவினர்களுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளனர்.
உறவினர்கள் இரவு 10:30 மணியளவில் சென்ற பிறகு, குடும்பத்தினர் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டுள்ளனர். அதன் பின்னரே அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கின் மர்மத்தை விலக்க மும்பை காவல்துறையினர் பல விசேட குழுக்களை அமைத்துத் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.