சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி; இரு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
காலி பகுதியில் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி அடிப்படையில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பகுதியில் இடம்பெற்ற சொத்துத் திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேகநபராகக் கருதப்பட்ட நபர் ஒருவரை, கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.

சொத்துத் திருட்டுச் சம்பவம்
காலி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி, சொத்துத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரான சிறுவனை, முறைப்பாட்டாளர் தரப்பினர் கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக அவரது தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 47 வயதுடைய பெண், அவரது கணவர் மற்றும் அவர்களின் 17 வயதுடைய மகள் மற்றும் மகன் எனத் தெரியவந்துள்ளது. கைதான சந்தேகநபர்கள் இன்று (04) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடம் மீலதிக விசாரணைகாளை பொலிஸார் மீற்கொண்டு வருகின்றனர்.