இராணுவ வீரர்கள் செய்த மோசமான செயல் ; பல மில்லியன் கொள்ளையடித்த பிரதான சூத்திரதாரிகள்
பல பகுதிகளில்உள்ள வீடுகளை உடைத்து, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்த பிரதான சூத்திரதாரிகள் மூவரைக் கண்டி தலைமையகப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கண்டி தலைமையகப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிறப்பு முற்றுகையின் போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, இக்கும்பலில் உள்ள இருவர் இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவான கமாண்டோ படையில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் இணைந்தே நாடளாவிய ரீதியில் இந்த பாரிய கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர். கெக்கிராவை, கினிகத்தேனை, பேராதனை, திறப்பனை மற்றும் அநுராதபுரம் போன்ற பல பகுதிகளில் இருந்து மாத்திரம் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அவ்வாறு திருடப்பட்ட நகைகள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சிலவற்றை விசேட பொலிஸ் குழுவினர் மீட்டுள்ளனர்.
கினிகத்தேனை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளும், மற்றொரு வீட்டில் இருந்து சில தங்க நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டிற்குள் புகுந்த இக்கும்பல், அங்கிருந்து 2.8 மில்லியன் ரூபா பணத்தையும், 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.
திறப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 3.2 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளது. கெக்கிராவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த இக்கும்பல், அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது.
அங்கு வசித்தவர்களின் கை, கால்களைக் கட்டி, வாயைப் பொத்தி கொடூரமான முறையில் அச்சுறுத்தி, அங்கிருந்த சொகுசு கார் மற்றும் பல பொருட்களைக் கொள்ளையடித்துத் தப்பியோடியுள்ளனர்.
மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஏனைய பொருட்கள், கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியிருந்த அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையங்களில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரையும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குக் கண்டி தலைமையகப் பொலிஸார் மேல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.