முன்னாள் சபாநாயகருக்கு அதிக அளவு உணவு செலவு ; வெளியான அறிக்கை
முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில் உணவுக்காக மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் இவ் விடயம் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட முழுமையான கணக்காய்வின் அறிக்கை, பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவினால் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த விசேட கணக்காய்வு விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கணக்காய்வு அறிக்கையில் நாடாளுமன்றத்தின் பல்வேறு துறைகளிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்த தகவல்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முழுமையான கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.