யாழில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு தீவிர சிகிச்சை பிரிவில்
தமிழ்த் தேசிய அரசியல் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கம் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவு
சிவாஜிலிங்கத்தின் இரண்டு சிறுநீரகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சில வாரங்களாக குறித்த மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருத்துவமனையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டு அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, நேற்று திங்கட்கிழமை அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்துள்ளது.
இதனையடுத்து, அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும், அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
தமிழ்த் தேசிய அரசியலில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்த எம்.கே. சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.