சென்னையில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உளவுப் பிரிவு அதிகாரி கைதானதாக தகவல்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கைதான நபர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டுக்காக நேற்றையதினம் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த 47 வயதுடையவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொச்சியில் பதிவு செய்யப்பட்ட கேரள ஆயுத வழக்கில் பிரதான சூத்திரதாரி அவர் என்றும், புலிகளின் மறுமலர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்காக கடத்தல் வருமானத்தை அவர் பயன்படுத்தி வந்ததாகவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சத்குணம் என்ற சபேசன் இந்தியாவில் புலிகளின் அனுதாபிகளின் சதி கூட்டங்களை ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் புலிகளின் மறுமலர்ச்சிக்காக போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தை மாற்றியமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த மார்ச் மாத இறுதியில் கேரள கடற்கரைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை படகென்றை இந்திய கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 3,000 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை கடலோர காவல்படையினரும் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஆறு இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், படகிலிருந்து ஐந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகளும் 90 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.