முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு சற்று முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (31) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் குழாத்தின் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் தமது பெரும்பான்மை தீர்ப்பை அறிவித்து, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டின் அடிப்படையில் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதே குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.