நீர்கொழும்பு கைதிகள் இடமாற்றம்; கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற போதைப்பொருள்
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியான தனது சகோதரரைப் பார்ப்பதற்காகக் கொழும்பில் இருந்து வந்து உணவகத்தில் தங்கியிருந்த இருவர், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மட்டக்களப்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களில் ஒருவர் குறித்த கைதியின் சகோதரர் என்பதோடு, மற்றையவர் அவரது நண்பராவார்.

விமான நிலையத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான நபர்
கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7.5 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் போதைப்பொருள் வியாபாரியும் அடங்குவார்.
மட்டக்களப்பிற்கு மாற்றப்பட்ட தனது சகோதரனைப் பார்ப்பதற்காக, அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து சென்று கல்லடிப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸார் புதன்கிழமை (29) இரவு அந்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அறையிலிருந்த இருவரிடமிருந்தும் 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கைதியின் சகோதரர் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, அண்மையில்தான் பிணையில் விடுதலையாகியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.