முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான, பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசின் உயரிய விருதுகள்
இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஆண்டு தோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், கடந்த ஜனவரி 25ஆம் திகதி 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா புதுடில்லியில் நேற்று நடைபெற்றது.
இதன்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவித்தார்.