மகளின் பல்லை உடைத்த மாணவனுக்கு முன்னாள் பொலிஸ் அதிகாரி செய்த மோசமான செயல்
கடுவலை - நவகமுவ பகுதியில் பாடசாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து 9 வயதுடைய சிறுவன் ஒருவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பில், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான சிறுவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவன் மீது தாக்குதல்
சந்தேகநபரான கான்ஸ்டபிளின் மகளும், தாக்கப்பட்ட சிறுவனும் ஒரே வகுப்பில் கல்வி கற்கின்றனர். இவர்கள் மேலும் சில மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சந்தேகநபரின் மகள் தள்ளப்பட்டு கீழே விழுந்ததில், அவரது முன் பல் ஒன்று உடைந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபரான தந்தையார், பாடசாலையின் வகுப்பறைக்குள் பலவந்தமாக நுழைந்து குறித்த சிறுவனைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் வகுப்பாசிரியையிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கான்ஸ்டபிள், 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொஹுவளை காவல்நிலையத்தில் கடமையாற்றும் போது, சான்றுப்பொருள் அலலாத உந்துருளி ஒன்றை பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த காரணத்தினால் முன்னதாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.