சட்டவிரோத கைத்துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது
பொலன்னறுவை மாவட்டம், எலகெரை பகுதியில் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எலகெரை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த நபர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவ சேவையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றிருந்தமை தெரியவந்துள்ளது.
எலகெரை பகுதியில் நபர் ஒருவர் அனுமதியின்றி துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான 7 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் எதற்காக சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்தார் என்பது தொடர்பிலும், இதன் பின்னணியில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்ததா என்பது தொடர்பிலும் எலகெரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.