UNHCR உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சர் இன்று பதில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று மாலை ஜெனிவாவில்ஆரம்பமானது.
எதிர்வரும் எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்களும் நிறுவனங்களும் முன்வைத்துள்ள சுமார் 90 அறிக்கைகள் குறித்து பேரவைகள் கலந்துரையாடப்படும்.
அதோடு 30க்கும் மேற்பட்ட விவாதங்களும் இடம்பெறும். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலட் பேரவையின் முதலாவது தினமான நேற்று தனது வருடாந்த அறிக்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட விடயங்களை முன்வைத்தார்.
இதன்போது அவர் , இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் முன்வைத்த விடயங்கள் விசேட கவனத்தை ஈர்த்தது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 16 விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதை அவர் பாராட்டியதுடன், இலங்கை ஜனாதிபதி சிவில் செயற்பாடு செயற்பாட்டாளர்களைச் சந்தித்ததையும் பாராட்டியுள்ளார்.
மேலும் சாதாரண விவாதம் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நாளை நிறைவு பெறவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இலங்கை தொடர்பான விடயங்களுக்கு இன்று பதில் அளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.