உடற்பயிற்சிக்கு முன் இந்த உணவுகளை தவற விடாதீர்கள்
உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சி பண்ண வேண்டும். அவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உடலின் இரத்த நாளங்கள் ரிலாக்ஸ் அடைந்து விரிவடைய வேண்டும். அதற்கு உடற்பயிற்சிக்கு முன் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ள வேண்டிய உணவுகள் எவை என நாம் இங்கு பார்ப்போம்.

பீட்ரூட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் உடலினுள் நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த குழாய்களின் சுவற்றை தளரச் செய்யும். ஆய்வு ஒன்றில், தினமும் ஐந்து அவுன்ஸ் பீட்ரூட் சாறு குடித்தவர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாள விறைப்பைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. எனவே தசைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவும், சகிப்புத்தன்மைக்காகவும், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடும் முன் பீட்ரூட் ஜூஸை குடியுங்கள்.

மாதுளம் பழம்
மாதுளையில் சக்தி வாய்ந்த பாலிஃபீனால் ஆக்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. ஆய்வு ஒன்றில் 1000 மிகி மாதுளை ஜூஸை உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்கும் போது, அது இரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, ஒட்டுமொத்த உடல் செயல்திறனையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடற்பயிற்சி செய்யும் முன் மாதுளம் பழ ஜூஸை குடியுங்கள்

தர்பூசணி
தர்பூசணியில் எல்-சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது உடலினுள் அர்ஜினைனாக மாற்றமடைந்து, பின் அது நைட்ரிக் ஆக்ஸைடை உருவாக்குகிறது. இதன் விளைவாக சில மணிநேரங்களிலேயே தமனிகள் தளர்வடைந்து, இரத்த ஓட்டம் உடலில் சிறப்பாக இருக்கும். எனவே இப்படிப்பட்ட தர்பூசணியை உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிடுங்கள்.

கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் வால்நட்ஸ்
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் எல்-அர்ஜினைன் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை அதிகரித்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே உடற்பயிற்சிக்கு முன் 1 கையளவு வால்நட்ஸ் அல்லது க்ரில் செய்யப்பட்ட சால்மன் மீன் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

பச்சை இலை காய்கறிகள்
பசலைக்கீரை, கேல் போன்ற பச்சை இலை காய்கறிகளில் டயட்டரி நைட்ரேட்டுகள் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடலில் ஆக்ஸிஜன் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். எனவே உடற்பயிற்சி செய்வற்கு 1 மணிநேரத்திற்கு முன் இந்த பச்சை இலை காய்கறிகளைக் கொண்டு ஸ்மூத்தியையோ அல்லது சாலட்டையோ சாப்பிடுங்கள்.
