கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஆபாசமா? சஜித் பிரேமதாஸ
கல்வி மறுசீரமைப்பு என்பது கல்வியில் ஆபாசத்தைப் புகுத்துவதல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
களுத்துறை, மத்துகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்வி
தாய் மற்றும் சேய் இறப்பு விகிதங்கள், குடிமக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு என அனைத்தும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இலவசக் கல்வியின் காரணமாகவே முன்னேற்றம் கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலவசக் கல்வியைக் கொண்டு வருவதற்கு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவுக்குப் பெரும் போராட்டமே நடத்த வேண்டிய தேவை இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபு வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும் இலவசக் கல்வியை எதிர்த்தபோதும், அந்தத் தடைகளைப் பொருட்படுத்தாமல் இலவசக் கல்வி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலவசக் கல்வியை வலுப்படுத்தி, அதனைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலவசக் கல்வியைத் தொடர்ந்துவரும், 41 இலட்சம் பிள்ளைகளும் இதற்கான உரிமையைப் பெறவேண்டும்.
இலங்கையின் அடையாளம், நாகரிகம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொண்டு இந்த கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். ஆனால், தற்போது முன்னெடுக்கப்படும் கல்விச் சீர்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.