சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப் பொருள்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் உருளை கிழங்கு பிரதானமானது.
மேலும் உருளை கிழங்கானது மக்களின் விருப்ப உணவு பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறது. ருசியைத் தருவது மட்டுமில்லாமல், இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கும் நன்மை அளிக்கின்றன.
குறிப்பாக சரும பராமரிப்பில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியால் கருமை அடையும் சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கும் முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றுவதற்கும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டு வருகின்றது.
உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி, சூரிய ஒளியால் சேதமடைந்த செல்களை குணப்படுத்துகிறது. இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்குகிறது.
சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கிறது. இதில் உள்ள 'கேடகோலேஸ்' என்ற நொதி சருமத்தின் கரும்புள்ளிகளை நீக்குகிறது.
உருளைக்கிழங்கைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க்
உருளைக்கிழங்கைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவதால் சருமம் பளிச்சிடுவது மட்டுமில்லாமல், அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடண்ட்டுகள் முகத்தில் இருக்கும் முதுமையான தோற்றத்தை மாற்றி, இளமை பொலிவைத் தருகின்றன.
செய்முறை
பாதி அளவு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து மித சூடுள்ள நீரில் முகத்தைக் கழுவினால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி மிருதுவாகும்.
கருவளையம் நீங்க
உருளைக்கிழங்கை இரண்டு வட்டவடிவ வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். அவற்றின் மீது கற்றாழை ஜெல்லைத் தடவவும். இதனை கண்களின் மீது வைக்கவும்.
15 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கை எடுத்துவிட்டு முகத்தைக் கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கருவளையம் நீங்கி கண்கள் பளிச்சிடும் என்று கூறப்பட்டு வருகின்றது.