மட்டக்களப்பு , அம்பாறை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று ஆற்றுப் படுக்கைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சோமாவதிய மற்றும் மனம்பிட்டி ஆகிய பிரதேசங்கள் இன்று மாலைக்குள் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

யான் ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் அப்பகுதி ஊடாகப் பயணிக்கும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், விசேடமாக குச்சவெளி, பதவிய ஸ்ரீபுர, கெப்பித்திகொல்லாவ, கோமரன்கடவல, ஹொரவபொத்தானை, மொரவெவ, கஹட்டகஸ்திகிலிய மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
இதேவேளை, முந்தானை ஆற்றுப் படுக்கையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, முந்தானை ஆறு படுக்கையைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முந்தானை ஆறு சார்ந்த தாழ்வான பகுதிகளில், தற்போதிருந்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாதுறு ஓயா படுக்கையைச் சேர்ந்த கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மஹாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டி, திம்புலாகல, வெலிகந்த மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மாதுறு ஓயா சார்ந்த தாழ்வான பகுதிகளில் தற்போதிருந்து அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
