மட்டக்களப்பில் இடைவிடாத மழை; வீதியில் விழுந்த பாரிய மரம்
மட்டக்களப்பில் இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள மதுபானசாலை வீதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளதனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையினால் முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதுடன், மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்ட பகுதிகளின் மின் இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டு வருகின்றது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அதேவேளை கல்லடி பகுதியிலும் மரங்கள் முறிந்ததனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள இருதயபுரம், கருவேப்பங்கேணி, மாமாங்கம், கூழாவடி, புதூர், சேத்துக்குடா, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதுடன், பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் கன மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.