அடுத்த 48 மணி நேரம் அவதானம் ; களனி கங்கை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளது.
எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.