இலங்கையில் இருந்து அம்பியூலன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்றவர் யார்? வெளியான தகவல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சிங்கப்பூரின் அம்பியூலன்ஸ் விமானமொன்று இலங்கையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அது தொடர்பிலான உண்மை விபரம் தற்போது அம்பலமாகியுள்ளது. நேற்று முன்தினம் ஜேர்மனிலிருந்து மஸ்கட் வழியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அம்பியூலன்ஸ் விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அதில் சிங்கப்பூரைச் சேர்ந்த அஜய் பட்டாச்சார்யா என்ற சிங்கப்பூர் பிரஜை வந்துள்ளார். இவர் ஜேர்மனில் வைத்து திடீர் சுகயீனமடைந்த நிலையில் கட்டுநாயக்கவிற்கு அழைத்துவரப்பட்டு, சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்த அந்நாட்டிற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் விமானம் ஊடாக சிங்கப்பூருக்கு நேற்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் கெயார் ஏவியேஷன் என்ற இலங்கையைச் சேர்ந்த விமான சேவைகள் நிறுவனமே இந்த செயற்பாட்டினை ஒழுங்கமைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே குறித்த விமானத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷதான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரதான் அதில் இருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன.
எனினும் அந்த தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது.
மேற்படி அம்பியூலன்ஸ் விமானம் கட்டுநாயக்கவில் தரையிறங்கி மற்றும் மீள்சென்றபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டையில் இருந்துள்ளதுடன், முன்னாள் அமைச்சர் மங்கள, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.