5 பேரை பலியெடுத்த தீ விபத்து ; அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் தீப்பற்றும்போது மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனக் சேர்மங்களை உருவாக்கக்கூடும் என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

முழுமையான விசாரணை
அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய அளவுகோல்களான சப்தம் மற்றும் காற்றின் தரம் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் கழிவு அகற்றும் அறிக்கை ஆகியவற்றை அந்தத் தொழிற்சாலை மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கவில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டத்தையும் தொழிற்சாலை தயாரித்திருக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உரிய அளவுகோல்களைப் பூர்த்தி செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு பல சந்தர்ப்பங்களில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கடைசியாக கடந்த ஜூலை 2 ஆம் திகதியும் இது தொடர்பாக நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலைக்குள் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
காலை 9:50 மணியளவில் ஏற்பட்ட தீ, பின்னர் விரைவாகத் தொழிற்சாலை முழுவதும் பரவியதுடன், சுற்றியுள்ள பகுதி அடர்ந்த கருப்பு புகையால் சூழப்பட்டது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு, கோட்டே, தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபைகள், ஹோரணை நகர சபை மற்றும் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
தொழிற்சாலையின் உட்பகுதியைக் குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்விசிறி ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்குக் காரணம் என பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட போது தலைக்கவச தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட பெருமளவிலான இரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.