பட்டாம்பூச்சிகளை பிடித்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு 6 கோடி ரூபாய் அபராதம்!
இலங்கையின் தேசிய பூங்காவில் இருந்து 92 வகை பட்டாம்பூச்சிகள் உட்பட அரிய வகை பூச்சி இனங்களை சேகரித்து வைத்திருந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு 6 கோடி ரூபாய் (அமெரிக்க டொலர் 200,000; யூரோ 150,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்த 68 வயதுடைய தந்தையான லூய்கி ஃபெராரிக்கும், அவரது 28 வயதுடைய மகனான மட்டிக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு அபராதம்
இவர்கள் கடந்த மே 8 ஆம் திகதி கண்ணாடி போத்தல்களில் அடைந்து வைத்திருந்த பூச்சி இனங்களுடன் யால தேசிய பூங்கா காவலர்களால் கைது செய்யப்பட்டனர்.
விலங்குகளை ஈர்க்கும் பொருட்களுடன் பூச்சிகளை கவர்ந்து இழுத்து, அவற்றை இரசாயன முறையில் பாதுகாக்க மெழுகுப் பைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பூச்சி இனங்களை சட்டவிரோதமாக சேகரித்தல், வைத்திருத்தல் மற்றும் கொண்டு சென்றதற்காக செப்டெம்பர் தொடக்கத்தில் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அதேவேளை இலங்கையில் வனவிலங்கு குற்றங்களுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.