இலங்கையில் Gov Pay பெயரில் நிதி மோசடி ; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
Gov Pay என்ற அரசாங்க கட்டண இணையதளத்தின் பெயரைப் பயன்படுத்தி தற்போதைய நாட்களில் புதிய நிதி மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
வாகன ஓட்டுநர்களின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதப் பணத்தை வசூலிப்பதாகக் கூறியே இந்த மோசடி செய்யப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

போலியான எச்சரிக்கை
மோசடிக்காரர்கள் பொதுமக்களை இலக்கு வைத்து +63 969 216 1720 என்ற வெளிநாட்டுத் தொலைபேசி எண்ணிலிருந்து குறுஞ்செய்திகள் (SMS) அல்லது வட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்புகின்றனர்.
அதில், சம்பந்தப்பட்ட நபர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக போலியான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அத்துடன், அந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை (Link) கிளிக் செய்து, குறிப்பிட்ட அபராத தொகையைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த மோசடிக்காகப் பயன்படுத்தப்படும் இணையதளமானது, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ “Gov Pay” இணையதளத்தை அச்சு அசலாக ஒத்திருக்குமாறு மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்படுபவர்கள் அந்த இணையதளத்திற்குச் சென்றதும், அபராதப் பணத்தைச் செலுத்துவதற்காக அவர்களின் வங்கி அட்டை விபரங்களை (Bank Card Details) உள்ளிடுமாறு கோரப்படுகிறார்கள்.
இதன் மூலம், பொதுமக்களின் வங்கி கணக்குகளிலிருந்து மோசடிக்காரர்கள் நேரடியாகப் பணத்தைத் திருடுவதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இதுபோன்ற அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் அல்லது வட்ஸ்அப் செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறும், அவற்றுடன் வரும் இணையதள முகவரிகளை (Links) எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.