புலமைப்பரிசில் பரீட்சை சிக்கலுக்கான இறுதி தீர்மானம்
இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதே சிறந்த மாற்றாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அந்த அறிக்கையை ஆய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்க கல்விக்கு பொறுப்பான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
கல்வியாளர்கள், கல்வி உளவியலாளர்கள், விசேட வைத்தியர்கள் மற்றும் புள்ளியியல் அறிஞர்கள் ஆகியோரைக் கொண்டு அந்த குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மீண்டும் பரீட்சையை நடத்துவது, 10 வயதுக்குட்பட்ட மாணவர்களின் மன நிலையில் கடுமையான பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் நீதி வழங்குவது இன்றியமையாதது என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
எனவே பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சைக்கு முன்னதாக விவாதிக்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.