FIFA World Cup;வரலாற்றில் முதன்முறை 30 தங்க மோதிரங்கள்; வெல்லப்போவது யார்!
பிபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 96 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் வீரர்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.
வழக்கமாக சாம்பியன் அணிக்கு உலகக்கிண்ணமும், தங்கப் பதக்கங்களும் மட்டுமே வழங்கப்படும். ஆனால், வட அமெரிக்க கண்டத்தில் 19ஆம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணியினருக்கு மோதிரம் வழங்கும் பாரம்பரிய முறையை, பிபா தற்போது உலகக்கிண்ணத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
30 தங்க மோதிரங்கள்
ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையே இன்று நள்ளிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 30 தங்க மோதிரங்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.
நடப்பு உலக செம்பியனான ஆர்ஜென்டினாவும், ஐரோப்பிய செம்பியனான ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன் அணியை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக இந்த மோதிரங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இத்தொடரை முன்னிட்டு மொத்தம் 2,026 மோதிரங்கள் செய்யப்படுகின்றன. இதில் சாம்பியன் அணிக்கு வழங்கப்படும் 30 மோதிரங்கள் தவிர, மீதமுள்ளவை கால்பந்து இரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. இருப்பினும், இந்த மோதிரங்களின் விலையை பிபா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, உலகக்கிண்ணக் கால்பந்து ஈர்ப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தென் அமெரிக்க நாடான பெருவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மெஸ்ஸி, ஹாலந்த், நெய்மர், ரொனால்டோ, என்ஸோ மற்றும் எமலியானோ போன்ற முன்னணி கால்பந்து வீரர்களின் பெயர்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனறமைக் குறிப்பிடத்தக்கது.