ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: அர்ஜெண்டினா பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!
கத்தாரில் இடம்பெற்று வரும் ஃபிஃபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க போட்டிகள் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் அமைந்து, ரசிகர்களுக்குப் பெருவிருந்து படைத்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களும் கூடுதல் நேரத்தையும் தாண்டி, பெனால்டி வாய்ப்புகள்வரை சென்றது.
பெனால்டி வாய்ப்புகளை எடுக்கும்போது பதற்றத்தில் முன்னணி வீரர்களும் கவிழ்ந்துவிடக்கூடும் என்பதால், ‘முடிவு எப்படி அமையுமோ?’ என உலகெங்குமுள்ள காற்பந்து ரசிகர்கள் தவிப்பில் ஆழ்ந்தனர்.
லுசெய்ல் அரங்கில் நடந்த நெதர்லாந்து அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவிற்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
உலகின் முன்னணி ஆட்டக்காரராகத் திகழ்ந்தபோதும் உலகக் கிண்ணத்தை ஒருமுறைகூட வெல்லாதது அர்ஜென்டினா அணித்தலைவரான லயனல் மெஸ்ஸிக்கு ஒரு மனக்குறையாக இருந்துவருகிறது.
35 வயது ஆகிவிட்டதால் இதுவே அவர் பங்கேற்கும் கடைசி உலகக் கிண்ணமாக இருக்கக்கூடும். அதனால், இம்முறை வாகை சூடியே தீருவது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, அணியை முன்னின்று வழிநடத்தி வருகிறார் மெஸ்ஸி.
அவ்வகையில், காலிறுதி ஆட்டத்திலும் தமது அணிக்காக விழுந்த முதல் கோலுக்கு அவரே முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் மெஸ்ஸி அனுப்பிய பந்தை நேர்த்தியாக வலைக்குள் தள்ளி அர்ஜென்டினாவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார் மொலினா.
இரண்டாம் பாதியில், 73வது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு முக்கியமான ஆட்டத்திலும் எப்படி பதற்றமேயின்றி பெனால்டியை எடுக்க முடிகிறது என ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில், மிக எளிதாக கோலடித்தார் மெஸ்ஸி.
அதற்கு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நெதர்லாந்தின் முன்னணி ஆட்டக்காரர் மெம்ஃபிஸ் டிப்பாய்க்குப் பதிலாகக் களமிறங்கிய வெஹோஸ்ட் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
83வது நிமிடத்தில் தலையால் முட்டி பந்தை வலைக்குள் தள்ளி, நெதர்லாந்தின் முதல் கோலை அடித்தார் அவர். அதன்பின், இடைநிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தின் 11வது நிமிடத்தில் மீண்டும் அவர் கோலடித்து, ஆட்டத்தை 2-2 எனச் சமனுக்குக் கொண்டுவர, அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதன்பின், கூடுதல் அரைமணி நேர ஆட்டத்தில் இருதரப்பும் கோலடிக்காததால் வெற்றியாளரை முடிவுசெய்ய பெனால்டி வாய்ப்புகள் முறை கையாளப்பட்டது.
அதில் 4-3 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்று, அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்தது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13-12-2022) இரவு நடக்கும் அரையிறுதியில் குரோவேஷியாவை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது.