நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து
நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்னையில் இருந்து வருகை தந்த வணிக கடல்சார் துறை அதிகாரிகள் நாகையில் இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், அக்குறைபாடுகளைச் சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்யுமாறு சென்னை வணிக கடல்சார் துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து, தற்போது கப்பல்களில் அவசியமான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் வரும் 11ஆம் திகதிக்குப் பின்னர் பயணிகள் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே திட்டமிடப்பட்ட அனைத்துப் பயணங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.