யாழில் பெண் கடற்படை சிப்பாயை பலாத்காரம் செய்த சக சிப்பாய்
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்த ஆண் கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதான கடற்படை சிப்பாயை மனநல வைத்தியரிடம் முற்படுத்தி , மனநல சான்று அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரு கடற்படை சிப்பாய்களும் 19 வயது
புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் சிப்பாய் ஒருவர் முகாமில் உள்ள பெண்கள் தங்குமிடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த வேளை , அங்கு அத்துமீறி நுழைந்த ஆண் கடற்படை சிப்பாய் பெண்ணிடம் அத்துமீறி நடந்து , பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புங்குடுதீவு கடற்படை முகாம் அதிகாரி , இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை வடபகுதி கட்டளை பணியகத்திடம் ஒப்படைத்தார்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த கடற்படை உயர் அதிகாரிகள் இருவரையும் காங்கேசன்துறை பொலிஸார் மூலம் ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
பொலிஸார் சந்தேகநபரான கடற்படை சிப்பாய் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் கடற்படை சிப்பாய் ஆகிய இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , பின்னர் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து சந்தேகநபரான கடற்படை சிப்பாயை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்திய வேளை சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
அதோடு , சந்தேக நபரை மனநல வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ அறிக்கையை பெறுமாறு மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டதுடன் , முறைப்பாட்டின் உண்மை தன்மை குறித்தும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கட்டளையிட்டது.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய இரு கடற்படை சிப்பாய்களும் 19 வயதுடையவர்கள் எனவும் , கடற்படை பயிற்சி காலத்தை நிறைவு செய்ய வில்லை எனவும் அறிய முடிகிறது.