குற்றவாளிகளுடன் மதுபான விருந்து; பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்!
வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் இணைந்து மதுபானம் அருந்திய வவுணதீவு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் கொஸ்தாப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை (29) இரவு கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த கு.ஜனுஷன் (31) மற்றும் அ.யோகேஸ்வரன் (36) ஆகிய இருவருடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளார்.
மதுபானம் அருந்திக் கொண்டிருந்த வேளையில், ஜனுஷன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியுள்ளது.
இருவரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டதில் பலத்த காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த இருவரும் கசிப்பு வியாபாரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்.
இச்சம்பவத்தின் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்; அவர்களுடன் இணைந்து மது அருந்தியதுடன், கடுமையான மதுபோதையிலும் இருந்துள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்து மதுபானம் அருந்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.