இலங்கை கடற்பரப்பில் சிக்கிய 20 ஈரான் கப்பல்கள் ; அமெரிக்கா விடுத்த அதிரடி எச்சரிக்கை
இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு சேவைகள் அல்லது பொருட்களை வழங்கினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகளுக்கு (Secondary Sanctions) முகங்கொடுக்க நேரிடும் என அமெரிக்க தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ, குறித்த கப்பல்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தற்போது இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சுமார் 20 ஈரான் எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றில் சில கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு குறைந்து வருவதாகவும் ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ தெரிவித்துள்ளது.
மேலும், தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு கப்பல் முகவர்கள், எரிபொருள் வழங்குநர்கள் மற்றும் ஏனைய சேவை நிறுவனங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஆதரவளித்தாலும் அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த செப்டெம்பர் மாதம் 40க்கும் மேற்பட்ட இலங்கை அதிகாரிகளுக்காக மூன்று நாள் பயிற்சி நிகழ்வொன்றை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் வழியிலான தடைகள் தவிர்ப்பு நடவடிக்கைகளை அடையாளம் காணுதல், சந்தேகத்திற்கிடமான கப்பல்களை கண்காணித்தல் மற்றும் தடைகள் தொடர்பான அபாயங்களை மதிப்பிடுதல் உள்ளிட்ட விடயங்கள் இதில் கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், செப்டெம்பர் மாத தொடக்கத்தில் ஈரான் கொடியுடன் கூடிய இரண்டு கொள்கலன் கப்பல்கள் கொழும்பு துறைமுக எல்லைக்குள் நங்கூரமிட்டபோது, அமெரிக்கத் தடைகளின் அபாயத்தை கருத்திற்கொண்டு அவற்றுக்கு சேவைகளை வழங்குவது பொருத்தமானதல்ல என இலங்கை துறைமுக அதிகாரசபை எழுத்துமூலம் அறிவித்ததாகவும் ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ அறிக்கையை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.