எல்லவில் விபத்துக்குள்ளான பேருந்தில் ஏற்பட்ட கோளாறு
எல்ல - வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் இயந்திரக் கோளாறு இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விபத்துக்குள்ளான பேருந்து நேற்று இரவு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
முற்றிலுமாக சேதமடைந்த பேருந்தின் பாகங்கள் எல்ல பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அத்துடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பேருந்தின் இயந்திரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் பேருந்து விபத்து ஏற்பட்ட பகுதியையும் இன்று ஆய்வு செய்தனர்.
பேருந்தின் பாகங்கள் அரச பகுப்பாய்வாளர் ஆய்வுக்காக எதிர்வரும் 8ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளன.
15 உயிர்களைப் காவுகொண்ட பேருந்து விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
எவ்வாறாயினும் பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்ததாக அதன் சாரதி கூச்சலிட்டதாக பேருந்தின் நடத்துநரும், பயணி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எல்ல - வெல்லவாய வீதியில் விபத்தில் சிக்கிய பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதிவில் இருந்து இடைவிலகிய பேருந்து என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பொழுதுபோக்கு பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு நாட்டில் இன்னும் சட்டங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.