அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
சமீபத்திய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப் பிரதிநிதிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பிரதமர் இதன்போது விளக்கினார்.

மண்சரிவு அபாயம்
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது ஆபத்தானது என சுட்டிக்காட்டிய பிரதமர், அறிவியல் ரீதியான மதிப்பீடுகளின் அடிப்படையில் அத்தகைய பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிதிச்சுமை ஏற்படாத வகையில் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களுக்குப் பிறகு மாணவர்களின் மனநலத்தை மேம்படுத்துவதில் பாடசாலைகள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் இதன்போது வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இடமாற்றம் செய்தல், உள்கட்டமைப்பை மீட்டெடுப்பது, சில பாடசாலைகளை இணைத்துக் கூட்டாக இயக்குதல், கற்பித்தல் மற்றும் கற்றலை ஆதரிக்க டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் சிறப்பு போக்குவரத்து வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல பகுதிகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இந்த பிரச்சினைகளுக்கான நீண்டகால தீர்வுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தநிலையில் கல்வித் துறையை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய யுனிசெப் பிரதிநிதிகள், இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.