தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குள் குடும்பத்தினர் செய்த செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குடும்பத் தகராறு தொடர்பான விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினரும், பொலிஸ் நிலைய வளாகத்திலேயே மீண்டும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் தலா 300 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

வாக்குமூலங்கள்
அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்தனர்.
இதன்பின், பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அவர்களை தலைமையகப் பொறுப்பதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தோரின் முன்னிலையில் இரு தரப்பினரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இரு தரப்பினரையும் சேர்ந்த 5 பேரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் நிலையத்திலுள்ள இரு தனித்தனி சிறைக்கூடங்களில் தடுத்து வைத்தார்.
கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணையின்போது, சந்தேகநபர்கள் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டதுடன், சமாதானமாகச் செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.