பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் உரிமை குடும்பத்தினருக்கு உள்ளது! ஐ.நா வதிவிடப்பிரதிநிதி வலியுறுத்து
காணாமல்போன தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதுடன் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துவதற்கான உரிமை காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி (Hana Singer Hamdi ) வலியுறுத்தியுள்ளார்.
இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த ஐ நாடு சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி (Hana Singer Hamdi ), அங்கு தமிழ் அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளைத் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருந்த அவர், ஐ.நா அலுவலகத்தின் ஊடாக அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்தார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் (Hana Singer Hamdi ),
'பன்னிரண்டு வருடகாலத் துன்பம் இன்னமும் ஆறாமல் இருக்கின்றது.
தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமையும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துகின்ற உரிமையும் காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு உள்ளது.
தமது காயத்தை ஆற்றுவதற்கான தேவை அவர்களுக்கு இருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டிக்கொள்வதற்கான அவர்களது போராட்டத்திற்கு சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என்றும் ஹனா சிங்கர் ஹம்டி (Hana Singer Hamdi ) வலியுறுத்தியுள்ளார்.