போலியான SLS முத்திரை ; 8,500 குடிநீர்ப் போத்தல்கள் பறிமுதல்
அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) போலியான SLS தரச் சான்றிதழ் முத்திரையைக் கொண்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ருவன்வெல்ல, அமிதிரிகல பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்தில் இந்தப் போத்தல்கள் தயாரிக்கப்பட்டு, அவிசாவளையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆரம்பக் கட்ட விசாரணை
அத்துடன், பல்வேறு அளவிலான குடிநீர்ப் போத்தல்களில் போலியான முறையில் SLS தரச் சான்றிதழ் முத்திரையும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் இடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தத் குடிநீர்த் தொகுதி இன்னும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. எனினும் விநியோகத்திற்காகத் தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுற்றிவளைப்பின்போது, சுமார் 8,500 போத்தல்களையும் சீல் வைத்து அதிகாரிகள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.