ஒன்பது வளைவுப் பாலத்தில் வெடிப்பு ; சமூக ஊடக செய்தி தொடர்பில் வெளியான தகவல்
எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'ஒன்பது வளைவுப் பாலத்தில்' புதிதாகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி முற்றிலும் தவறானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அண்மைய நாட்களில் ஒன்பது வளைவுப் பாலத்தில் புதிய வெடிப்புகளோ அல்லது ஆபத்தான நிலைமையோ ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலத்தில் நீர் கசிவு
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இப் பாலத்தில் நீர் கசிவு மற்றும் வெடிப்பு தொடர்பான தகவல்கள் பரவிய போது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்கள நிபுணர்கள் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாலத்தின் கட்டமைப்பில் எந்தவிதமான வெடிப்புகளோ அல்லது ஆபத்தான குறைபாடுகளோ இல்லை என்பது தெளிவாகக் கண்டறியப்பட்டது.
கடந்த ஆண்டு நிலவிய ஒரு செய்தியை மையமாக வைத்து, புதிதாக வெடிப்பு ஏற்பட்டுப் பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.