யாழில் சாரதி அனுமதி பத்திரத்தால் கனடா வாழ் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கனேடிய பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் போலி சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக கனடாவில் பிரஜாவுரிமை பெற்று வசித்து வரும் நபரே கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போலியான அனுமதி பத்திரம்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த போது நபர் ஒருவரின் உதவியுடன் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுள்ளார்.
அதன் பின்னர் கனடா சென்று, மீண்டும் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் (16) யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று தன்னுடைய தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க முயன்றுள்ளார்.
இதன்போதே அது போலியான அனுமதி பத்திரம் என அதிகாரிகள் கண்டறிந்தனர். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, போலி அனுமதி பத்திரத்தை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டார்.
மேலும் கைதான கனேடிய பிரஜையிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.