ஜோசியத்தால் நேர்ந்த விபரீதம்; காதலனுக்கு விசம் வைத்து கொன்ற காதலி !
முதல் திருமணம் நிலைக்காது என ஜோதிடர் கூறியதை நம்பி தனது காதலனுக்கு யுவதி ஒருவர் விசம்வைத்து கொன்ற சம்பவம் கேரளாவை உலுக்கிய நிலையில், வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட வழக்கில் உயிரிழந்த இளைஞரின் காதலி உட்பட மூவர் குற்றவாளி என இன்று (17) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
உயிரிழந்த குறித்த இளைஞர் அருந்திய குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞனின் காதலி உட்பட மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
கல்லூரியில் ஆரம்பித்த காதல்
தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்குகளின் முடிவில் இன்றைய தினம் (17) இவர்கள் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23). குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார்.
இவருக்கும் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கிரீஷ்மாவும் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
முதல் திருமணம் நிலைக்காது
இதனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில், கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் பணக்கார மாப்பிள்ளை ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
இதில் கிரீஷ்மாவுக்கு முதல் திருமணம் நிலைக்காது என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதை கிரீஷ்மாவிடம் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே ஷாரோன் ராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து பேசி திருமணம் செய்து கொண்டார் கிரீஷ்மா.
இதையடுத்து அவருக்கு மெல்ல கொல்லும் விஷத்தையும் கொடுத்து கொலை செய்துள்ளார். இந்நிலையில் இக்கொலை சம்பவத்தில் காதலி உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கான தண்டனை விபரம் நாளை வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.