கனடா செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் வந்த யாழ். இளைஞன் அதிரடி கைது!
சட்டவிரோத கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் தம்மாம் நோக்கிச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சொந்தமான UL-263 விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சவூதியிலிருந்து வேறு விமானம் மூலம் குறித்த இளைஞன் கனடா செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏர்லைன்ஸ் சோதனைகளை முடித்துக் கொண்டு குடிவரவுத் துறையின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களைச் சரிபார்த்துள்ளனர்.
அதன்போது, குறித்த கடவுச்சீட்டு கனேடிய வீசாவைக் கொண்டுள்ள மற்றுமொரு இலங்கையருடையது எனத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், 18 லட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் கொடுத்து, தனது புகைப்படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை கடவுச்சீட்டில் இணைத்து,
இந்தக் கடவுச்சீட்டை போலியாகத் தயாரித்துள்ளதாக, குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.