வருமான வரி செலுத்தும் காலம் நீடிப்பு
வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்திருந்த அறிவிப்பு, நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி வரி செலுத்துவோர் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை 2025 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பித்தால், தாமதமாக சமர்ப்பிப்பதற்கான அபராதம், மதிப்பீடுகளை வெளியிடுதல் அல்லது குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்.

இதுவரை அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாத அனைத்து வரி செலுத்துவோரும் வருமான அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைக் காலத்தை பயன்படுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.