வெள்ளத்தை தொடர்ந்து கண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து ; மக்களே அவதானம்!
நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.
எனவே கண் நோய்த்தொற்றுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் ஆரோக்கிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

கண் தொற்றுக்கான அறிகுறிகள்
கண்கள் சிவத்தல் மற்றும் வீக்கம், நீர் வடிதல் மற்றும் வெளியேற்றம், ஒளி உணர்திறன், கண் அரிப்பு, கண்களில் மண் அல்லது தூசி இருப்பது போன்ற உணர்வு ஆகியவை என்று பணியகம் தெரிவித்துள்ளது.
அதோடு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அடிக்கடி தண்ணீரில் கைகளைக் கழுவ வேண்டும் எனவும், கண்களைத் தொடுவதையோ அல்லது தேய்ப்பதையோ தவிர்க்க வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த அறிகுறிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தால், மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.