கனிம அகழ்வால் தமிழ் பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் ; சாணக்கியன் குற்றச்சாட்டு
இலங்கை வரலாற்றில் இதுவரை பெரியளவிலான கனிம அகழ்வு உரிமங்கள் வழங்கப்படவில்லை என்றும், வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு உரிமங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கனிம வளங்கள் மற்றும் புதிய தேசிய கனிமக் கொள்கை 2026 தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அரசாங்கம் தற்போது “ஆராய்ச்சி உரிமம்” என்ற பெயரில் பல தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான அனுமதிகள் கனிம வளங்கள் உள்ளனவா என்பதை ஆராய்வதற்காக மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
எனினும், சில தனியார் நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சி அனுமதிகளை அடிப்படையாகக் கொண்டு அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் தங்களைப் பட்டியலிட்டு, இலங்கையின் கனிம வளங்களை முதலீட்டாளர்களிடம் காட்சிப்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை ஈட்டி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நன்மை அடைந்தாலும், இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவித ராயல்டி வருமானமும் கிடைக்காத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பகுதிகள், திருகோணமலையின் குச்சவெளி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் பகுதிகள் எதிர்காலத்தில் கனிம மற்றும் இல்மனைட் அகழ்வு நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கனிம வளங்களின் பயன்பாடு மற்றும் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தேசிய நலன்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.