நிறைவுக்கு வந்த தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள்!
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்காலில் தங்கம், ஆயுதங்களை தேடி இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் இன்று (27.09.2023) மாலையுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழ் மக்களின் விடுதலை போராட்ட அமைப்பினால் தங்கம் மற்றும் ஆயுதங்கள்புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் கடந்த (25.09.2023) ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் கனரக இயந்திரத்தின் மூலம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அகழ்வின் போது கலந்துக்கொண்டோர்
இந்த அகழ்வு பணியின் போது தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலகம், கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின் போது கடற்கரையில் காணப்பட்ட குறித்த பகுதியானது முற்றுமுழுதாக அகழப்பட்டுள்ளதுடன் அதில் நின்ற மரங்கள், 15க்கும் மேற்பட்ட பனை கன்று வடலிகளும் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு தோண்டப்பட்ட நிலையில் இன்று (27.09.2023) மாலை 5.45 மணி வரை அகழ்வு பணிகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இடத்தினை மூடுமாறு நீதிபதி பணித்திருந்தார்.
குறித்த பகுதியில் 13 அடி ஆழமும் 17 மீற்றர் நீளம் வரை தோண்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதி மூடப்பட்டுள்ளது.