ஐரோப்பிய குளிர்காலச் சுற்றுலா; கட்டுநாயக்க வந்த ஏர் அஸ்தானா
ஐரோப்பாவில் குளிர்காலத்தை முன்னிட்டு, கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த முதல் விமானம் நேற்று (25) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
கஸகஸ்தானின் அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அஸ்தானா நிறுவனத்திற்குச் சொந்தமான KC-167 ரக விமானம் மூலம், மாலை 4.10 மணியளவில் இந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்.

ஏர் அஸ்தானா விமானத்தில் 182 பயணிகளும் 08 பணிக்குழாமினரும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏர் அஸ்தானா விமான சேவையானது வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை கஸகஸ்தானின் அல்மாட்டியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

