சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் இலங்கைக்கு திடீர் விஜயம்
இலங்கைக்கு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்றைய தினம் (18.11.2023) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் (21.11.2023) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் திட்டம்
இதேவேளை கொழும்பு துறைமுக நகர் திட்டம், ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல்வேறு சீன முதலீட்டு திட்டங்கள்தொடர்பில் அரச தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதுடன், கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முகமது முய்சுவின் பதவியேற்பு நிகழ்வு நேற்று (17.11.2023) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதில் பங்கேற்கும் வகையில் முதலில் மாலைதீவுக்கான விஜயத்தை சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் முடித்துக்கொண்டு இதனை தொடர்ந்தே இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.