வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் தடையை நீக்கவுள்ள இலங்கை
அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்படாது என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இந்து சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிடத்தின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.
2022ஆம் ஆண்டு சீன ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கைக்குள் பிரவேசிப்பது தொடர்பில் இந்தியாவின் கவலையை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை இலங்கைக்கு பொருத்தமானதாக மாற்றக் கூடாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் பயன்படுத்தப்படாத கடல் வளங்கள் இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்வது மிகவும் அவசியமானது எனவும், அது வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.