காலி முகத்திடல் போராட்டம்; வெளிநாட்டு பெண்ணைதேடும் பொலிஸார்!
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக இணையத்தில் பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்ட பிரித்தானிய பெண் ஒருவர் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மருத்துவ வதிவிட விசா என்ற பிரிவின் கீழ் இலங்கை வந்த குறித்த பெண், காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டமை தெரியவந்துள்ளது. சமூகவலைத்தளங்களில் அவர் போராட்ட பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீடியோக்களை பரப்பியது தற்போது தெரியவந்துள்ளது.
போராட்டக்காரர்களின் தலைக்கு பாதுகாப்பு தரப்பினர் கைத்துப்பாக்கிகளை காட்டுவதாக அழுது புலம்பிய அந்த பெண், பத்தரமுல்லையில் இராணுவ முகாம் கட்டமைப்பு ஒன்று இவ்வாறான நாட்டிற்கு அவசியமில்லை எனவும், நாட்டை மாற்றுவதற்கு ஒன்றிணையுங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.
மருத்துவ வதிவிட விசா பிரிவின் கீழ் 2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் பிரித்தானிய விசாவை நீடித்து நீர்கொழும்பு மற்றும் மாலபே ஆகிய இடங்களில் அவர் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விசா நிபந்தனைகளை மீறும் வகையில் செயற்பட்டமைக்காக அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அதோடு விசாரணையின் அடிப்படையில் பிரித்தானிய பெண்ணின் விசாவை மேலும் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.